Hi, You have yet to confirm whether you would like to connect with Dharmendra Gupta. Please choose from the following options:
Regards, The WAYN Team |
To stop receiving any notifications from WAYN, click here
[என் கனவுகள் ] - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கருப்புத் தேனீர் - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - தொலைதூரப் பயணம் - மீண்டுமொரு பாரதி - தலைகோதக் காதலி - வடியாத காமம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
Hi, You have yet to confirm whether you would like to connect with Dharmendra Gupta. Please choose from the following options:
Regards, The WAYN Team |
உலகில் மிகப்பெரும் அணுஉலைப் பேரழிவுகள் 1979ல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு, 1986ல் பழைய சோவியத் யூனியனில் இருந்த செர்னோபில், 2011ல் ஜப்பானின் புகுஷிமாவிலும் நிகழ்ந்துள்ளன. அணுஉலைப் பேரழிவுகள் நிகழ்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஆற்றல் விஞ்ஞானிகள் (Energy Scientist) மக்களின் கடும் எதிர்ப்பால் புதிய அணுஉலைகள் ஏதும் அமைக்கப்படவில்லை.
இவை தவிர, சிறிய பெரிய அணு உலை விபத்துக்கள் உலகின் பல நாட்டு அணுஉலைகளில் பல்வேறு காலங்களில் நடந்து வருகின்றன. பொதுவாக, அணுஉலைகள் அணுகுண்டு தயாரிப்பு, இராணுவத்தோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவற்றில் நடக்கிற விஷயங்கள் ரகசியம் என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகின்றன. அவை எளிதில் வெளி வருவதில்லை. இவையனைத்தையும் மீறி வெளிவந்த விபத்துக்கள் ஏராளம்.
இந்திய அணு உலைகளில் கோளாறுகள் காரணமாக 127 சீரமைப்புகளும், மாற்றங்களும் செய்ய வேண்டியுள்ளது இவற்றில் பெரும்பாலான கோளாறுகள் 10 முதல் 12 வருடங்களாக இருந்து வருகின்றன என்று 1998 யிலேயே வெளியான் செய்திகள் தெரிவிக்கின்றன. சுற்றுச் சூழல், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றின் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் அணுஉலைகளைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடவைத்து வருகின்றனர் புதிய அணுஉலைகளை நிறுவவிடாமல் தடுக்கும் வகையில் எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் அணுத் தொழில் செய்துவந்த பெருந்தொழில் நிறுவனங்களின் தொழில்கள் முடங்கியும் மூடப்படும் நெருக்கடிக்கு உள்ளாகியும் வருகின்றன.
இந்திய அரசின் பொக்ரான் – 2 அணுகுண்டுச் சோதனைக்குப் பின் அணு வியாபார நாடுகளின் கூட்டமைப்பு (Nuclear Suppliers Group) இந்தியாவிற்கு அணுப் பொருட்கள், அணுத்தொழில்நுட்பத்தை வழங்குவதில்லை என முடிவெடுத்திருந்தது. இத்தடையை அந்தக் கூட்டமைப்பு அக்டோபர் 2008ல் தளர்த்தியது. இந்தியாவின் மீதான தடையை நீக்கினால் தான் அங்கு தாங்கள் பெருமளவு அணுத் தொழில் செய்யமுடியும் என்ற நிலையில், இது நிகழ்ந்தது. இத்தடையை நீக்குவதில் முனைப்பாய் இருந்தவைகள் ரஷ்ய, அமெரிக்க, பிரான்சு அரசுகள்.
இதையடுத்து பிரான்சு அரசு மஹாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாப்பூரில், தன் நாட்டின் பெரும் அணுத்தொழில் நிறுவனமான "அரேவா"வானது அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசுடன் கையெழுத்திட்டது. இதைத் தொடர்ந்து வந்த இந்திய – அமெரிக்க அணுஉலை ஒப்பந்தத்திற்கு (Indo – American Civil Nuclear Co – operation) கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது மத்தியில் ஆண்ட, மன்மோகன்சிங் தலைமையிலான முதலாவது காங்கிரஸ் கூட்டணி அரசு, ஆட்சி கவிழ்கின்ற சூழலில் கூட அந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டே தீருவது என்று உறுதியாக இருந்தது. அப்போது, இந்தியப் பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டிற்கான வாக்கெடுப்பின் போது நடந்த குதிரை பேரம் நாடறிந்த ஒன்று. பன்னாட்டுக் கம்பெனிகள் புதிய அணுஉலைகளை இந்தியாவின் பல்வேறு இடங்களில் அமைக்கத் திட்டமிட்டுள்ளன. அவர்களின் சார்பில் அமெரிக்க, பிரான்சு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தியா நோக்கிப் படையெடுத்து வந்தது மிகச் சமீபத்திய நிகழ்வுகள்.
கூடங்குளம் என்ற தென்தமிழகத் கடலோரக் கிராமத்தில் ஒரே பகுதியில் 8 எண்ணிக்கையிலான 1000 மெகா வாட் மின்சக்தி திறன் கொண்ட அணு உலைகளை அமைக்கும் திட்டத்தை ரஷியாவுடன் உறுதிப்படுத்தி இருக்கிறது இந்திய அரசு. ஏற்கெனவே அநேகமாக கட்டிமுடிக்கப்பட்ட இரு அணுஉலைகளை இயக்கும் தருவாயில் அப்பகுதி மக்கள்திரள் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக அணு உலைகளை எதிர்த்து நடந்து கொண்டிருக்கும் வேளையில், 4 கூடுதல் உலைகளை ரஷ்ய பன்னாட்டு நிறுவனம் நிறுவுவதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் இந்திய அணுசக்திக் கழக நிறுவனம் (NPCIL) ஈடுபட்டிருக்கிறது.
இந்திய அணு உலை விபத்து நஷ்ட ஈட்டுச் சட்டம்: செட்பம்பர் 10, 2008ல், இந்திய வெளியுறவுச் செயலாளர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸீக்கு கடிதம் எழுதினார். அதில் பாரதப் பிரதமரின் சார்பில் இரு ஒப்புதல்கள் அமெரிக்க அரசுக்கு அளிக்கப்பட்டது. அந்த ஒப்புதல்கள்:
1. அமெரிக்காவிடமிருந்து இந்தியா 10,000 மெகா வாட் மின்சக்தி கொண்ட இலகு நீர் உலைகளை (Light Water Reactors) வாங்கும்.
2. அணுவிபத்துக்கான கூடுதல் நஷ்டஈட்டிற்கான கூட்டமைப்பின் தீர்மானத்தை (Convention on Supplementary Compensation for Nuclear damage) ஒத்துப் போவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்.
மேற்கூறிய கூடுதல் நஷ்டஈட்டிற்கான தீர்மானம், இந்தியாவில் நடக்கும் எல்லா அணு உலை விபத்துக்களுக்கும் தற்போது அணுஉலையை இயக்குபவரே முழுப்பொறுப்பையும் ஏற்கும் விதத்தில் இந்திய அணு உலை விபத்திற்கான நஷ்ட ஈட்டுச்சட்டத்தை (Indian Liability Law for Nuclear damage) இந்திய அரசு வடிவமைக்க வேண்டும் என்பதை அது வலியுறுத்துகிறது.
ஆக, அணு உலை விபத்து ஏற்பட்டால் அணு உலை அமைக்கும் பன்னாட்டுக் கம்பெனிக்குப் பொறுப்பு கிடையாது. மாறாக அந்த உலையை இயக்கும் இந்திய நிறுவனத்தின் மீது, அதாவது உண்மையில் தீப்பெட்டிக்கு முதற்கொண்டு வரிப்பணம் செலுத்தும் இந்திய மக்கள் அனைவரின் மீதும் முழுப்பொறுப்பும் விழும்! இவ்வளவு முக்கியமான நஷ்டஈட்டு மசோதா பற்றி வாக்குக் கொடுப்பதற்கு மக்களையோ, பாராளுமன்றத்தையோ பாரதப் பிரதமர் கேட்டாரா? இல்லை.
இந்த ஒப்புதல்களை பாரதப் பிரதமரிடம் இருந்து பெற்றபின்தான் அமெரிக்க அதிபர் அக்டோபர் 8, 2008ல் இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் (Indo – American Civil Nuclear Co- operation).
செட்பம்பர் 1, 2010 ல் இந்தியப் பாராளுமன்றம் இந்திய அணு உலை நஷ்டஈட்டு சட்டத்தை (Indian Nuclear Liability Law) இயற்றுகிறது. அது அமெரிக்கா, பிரான்சு, ரஷ்ய நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையவில்லை. அது அணு உலை விபத்து ஏற்பட்டால் அணு உலைகள், தொழில் நுட்பம் வழங்குகின்றவர்கள், அணு உலை இயக்குபவர்கள் என இருவருமே பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்கிறது.
கூடங்குளத்தின் முதல் இரு அணுஉலைகளுக்கும் 2010ல் இயற்றப்பட்ட இந்தப் புதிய நஷ்டஈட்டுச் சட்டம் பொருந்தாது. இது ரஷ்ய அணுஉலை நிறுவனத்திற்கும், அரசுக்கும் சாதகமானது. பொருந்தாமல் இருப்பதற்கு காரணம் இவ்விரு உலைகளுக்கான ஒப்பந்தம் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே இந்திய – ரஷ்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பது தான்.
அந்த அரசுகள் தங்களுக்குத் தடையாய் இருப்பது 2010ல் இயற்றப்பட்ட இந்திய அணுஉலை விபத்திற்கான நஷ்டஈட்டுச்சட்டம் தான் என்றன.
அக்டோபர் 27, 2010ல் அமெரிக்க, பிரான்சு நாடுகள் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று கோரிய அணுவிபத்துக்கான கூடுதல் நஷ்டஈட்டிற்கான கூட்டமைப்பின் தீர்மானத்தை (Convention on Supplementary Compensation for Nuclear Damage) வியன்னாவில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு பல ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகளை அமைக்கும் திட்டம் இந்திய அரசிடம் இருக்கிறது. இது பல பில்லியன் டாலர் தொழில். விடுமா அமெரிக்க, பிரென்சு, ரஷ்ய அணுஉலைப் பெருந்தொழில் நிறுவனங்கள்! அதனால் தான் இந்திய இழப்பிட்டுச் சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றவேண்டும் என தங்கள் நாட்டு வெளியுறவு அமைச்சர்களை இந்தியாவை நோக்கி படையெடுக்க வைத்தனர், வைக்கின்றனர்.
அணுப் பாதுகாப்பிற்கான கட்டுப்பாட்டு ஆணையம்: புகுஷிமா அணு உலைப் பேரழிவை அடுத்து சுதந்திரமான, வெளிப்படையான அணுப் பாதுகாப்பிற்கான ஆணையம் அமைக்க வேண்டி இருப்பதாகக் கூறி, இந்திய பாராளுமன்றத்தில் செப்டம்பர் 7, 2011ல் புதிய வரைவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயர் அணுப் பாதுகாப்பிற்கான கட்டுப்பாட்டு ஆணைய (Nuclear Safety Regulatory Authority) வரைவு மசோதாவாகும். இதன் நோக்கம் அணுக் கதிர்வீச்சுப் பாதுகாப்பிற்கான ஆணையம், சட்ட ரீதியான அதிகாரத்தையும் உருவாக்குவதாகும். இதில் முன்மொழியப்பட்டுள்ள ஆணையம் மிகச் சில அதிகாரங்களைக் கொண்டுள்ளது தற்போதுள்ள இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (AERB) அதிகாரத்தைக் காட்டிலும் இப்புதிய ஆணையம் குறைந்த அளவிலான சுதந்திரத்தையே கொண்டிருக்கும் என்று குரல் எழுப்பி வருகிறார் இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன்.
புகுஷிமா பேரழிவுக்குப் பின் ஜப்பானில் உள்நாட்டில் அணுஉலைகள் மிகவும் அபாயகரமானது என்பதால், அங்கிருக்கின்ற உலைகளை மூடத்திட்டமிட்டுள்ளது ஜப்பானிய அரசு. ஜப்பானிய மக்கள் எதிர்ப்பின் காரணமாக நிறுவப்பட்டுள்ள 54 உலைகளில் 10ல் ஒரு உலையே இயங்குகின்றன. அதே நேரத்தில் பிற நாடுகளுக்கு (குறிப்பாக அணு உலைத் தொழில்நுட்பத்தை வியட்நாம், சமீபத்தில் நில நடுக்கத்தைச் சந்தித்துள்ள துருக்கிக்கு) விற்பதற்கான ஜப்பானிய அணுத் தொழிற்துறையின் புதிய முனைப்பிற்கு புதிய ஜப்பானியப் பிரதமர் துணை நிற்கிறார். மக்களும், எதிர்கட்சியினரும், இந்நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இப்போது இந்திய அரசு – ஜப்பானிய அரசுக்கு அணுஉலைத் தொழிலை இந்தியாவில் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக டோக்கியோ சென்றார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.
புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு ஜெர்மனி 2022ம் ஆண்டிற்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற அணுஉலைகள் அனைத்தையும் மூடிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்ததும், அணு தொழிலைச் செய்து வந்ததுமான "சீமென்ஸ்" என்ற பன்னாட்டு நிறுவனம் அத்தொழில் செய்வதைக் கைவிட்டது. ஜெர்மனியில் அணுஉலைகளுக்கு எதிரான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிவந்தது அந்நிறுவனம். இப்படி தாங்களும், தங்கள் நாடும் அணுமின் ஆற்றலைக் கைவிட்டிருப்பது உலக மக்கள் அனைவரையும் எங்கள் உணவர்வுகளைச் செவிமடுக்கச் செய்கின்ற இந்நுற்றாண்டின் அதி முக்கியச் செயல்திட்டம் (The Centuries Project) என்கிறார் "சீமென்ஸ்" நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
அணு உலைப் பாதுகாப்பு பற்றி பொது விவாதத்திற்கு தடை: இது புதுதில்லியில் உள்ள பிரென்சு தூதரகத்தின் கலாச்சார நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தோடு நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது பிரான்சின் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து கணிசமான உதவிகளைப் பெற்று வருகிறது. அக்டோபர் 10, 2011ம் தேதி முதல் இந்த அலெயன்ஸ் பிரான்சின் 6 மையங்களிலும், "புகுஷிமாவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் அணு ஆற்றல் பற்றிய செய்திகளைத் திரட்டுவதில் ஊடகங்களின் கடமை" குறித்து பிரெஞ்சு பெண் பத்திரிக்கையாளர் பேசுவதாக நிகழ்ச்சி நிரல் தயாராகி இருந்தது.
இது தொடர்பாக அந்தப் பத்திரிக்கையாளர் ஒருமாதத்திற்கும் மேலாக இந்தியா பிரான்சு, ஜப்பான் நாடுகளில் வெளிவந்த ஊடகச் செய்திகளை எடுத்து ஆய்வு செய்திருந்தார். ஆனால் திடீரென்று அலெயன்ஸ் பிரான்சின் இயக்குநனரான திரு. பிலிப் காஸ்பாரினி அப்பத்திரிக்கையாளரிடம் "தாங்கள் அத்தலைப்பில் பேசமுடியாது. புகுஷிமாவுக்குப் பின்னர் பாதுகாப்புச் சோதனைகள் திருப்தியளிக்கும் வகையில் முழுமையாகச் செயல்படுத்தப்படாதவரை பிரான்சின் அவேரா கம்பெனி விற்க நினைக்கும் நுPசு வகை அணு உலைகளை வாங்குவதற்கான இறுதி முடிவை இந்தியா தள்ளிப்போடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு சிக்கலான விசயம்" என்று காரணம் கூறினார். அப்பெண் பத்திரிக்கையாளரான டெஸ்வெஸ்னஸ், பிரென்சு அதிகாரிகள் தான் இந்நிகழ்வுகள் நடைபெறவிடாமல் தடுத்துள்ளனர் அவர்கள் இது தொடர்பான விவாதங்கைளப் பற்றிப் பேரச்சங்கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்.
போபாலில் அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விஷவாயு விபத்தால் ஏதுமறியா மக்கள் பலர் மாண்டனர் இன்றளவும் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு வருகின்றனர் அத்தொழில் நிறுவனத்தின் தலைவரை ஆட்சியாளர்கள் எவ்விதமாகத் தந்திரமான வழிகளில் இந்தியாவில் இருந்து தப்பிக்க வைத்தனர் இன்றளவும் முறையான நஷ்ட ஈடு எதையும் அந்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனம் வழங்க மறுத்து வருகிறது என்பது கண்கூடு.
பெருந்தொழில் நிறுவனங்களின் இயங்கியலும், லட்சணமும் இப்படி இருக்க, இந்தியாவை வட்டமடிக்கும் அந்த அணுத்தொழில் நிறுவனங்களுக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கிறது இந்திய அரசு. அந்த அரசுகள் தங்களுக்குத் தடையாய் இருப்பது 2010ல் இயற்றப்பட்ட இந்திய அணுஉலை விபத்திற்கான நஷ்டஈட்டுச்சட்டம் தான் என்றகின்றன.
உலக நடப்புக்கள் இப்படி இருக்க, நம்மூர் அணுவிஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம். அவர்கள்,
"சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்க ஒரு யூனிட்டிற்கு (KWhr) 25 ரூபாய் தயாரிப்புச் செலவு ஆகும் காற்றாலையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் காற்றடிப்பதைக் பொறுத்து இருப்பதால் நம்பகத் தன்மை இல்லாமல் இருக்கிறது அணுசக்தி ஒன்றினால் தான் நம் ஆற்றல் தேவையை நிறைவு செய்யமுடியும்! அதுவே மாசுமறுவற்றது, புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் (Green House Gases) வெளியிடாதது அதைக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் அதுவே நம் ஆற்றல் தேவைக்கு விடிவெள்ளி, வரப்பிரசாதம்" என்று பொது வெளியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
"தற்போது இயங்கத் துடிக்கும் கூடங்குளத்து இரு அணு உலைகளும், ஜெய்தாப்பூர் போன்ற பிற இடங்களில் நிறுவ இருக்கின்ற உலைகள் மூன்றாம் தலைமுறைக்கும் மேம்பட்ட அணுஉலைகள். அவை மிகவும் பாதுகாப்பானவை அணுஉலைகள் பாதுகாப்பற்றவை என்று கூறுபவர்கள் அணு விஞ்ஞானம் பற்றி ஏதும் அறியாதவர்கள்" என்றெல்லாம் கூறி வருகின்றனர், நம் அணு விஞ்ஞானிகள்.
அணுவிஞ்ஞானிகள் அணுப்பொருட்கள் பற்றி ஒன்றை மக்களுக்கு விளக்கவே இல்லை. அது என்னவெனில் அது காலங்காலத்திற்கும் கிடைக்கக் கூடிய பொருள் அல்ல, அதுவும் பெட்ரோல் போலத்தான். யுரேனியம் வெளிநாட்டிலிருந்து வாங்கினால் நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டி வருமே? பொருள் அளவு குறைய குறைய போட்டா போட்டி நடக்கும், கிராக்கி ஏறும், அப்போது மின்விலை உயராதா? ஆனால் சூரிய சக்தியும், காற்றும் புவி உள்ளவரை இருக்கக் கூடியவை. அதனால் என்றென்றைக்கும் வருவது சிறந்ததா? குறுகிய காலத்திற்கு வருவது சிறந்ததா? வேறு வழி இல்லையா?
அணுசக்தி கழகத்தில் Strategic Planning Group என்று ஒன்று உள்ளது. இக்குழுவைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இந்தியாவின் பல இடங்களில் அணுஉலைகளை அமைத்து அவற்றின் மூலமாக தற்போது நிறுவப்பட்டுள்ள மின்சக்தித் திறனான 4780 மெகாவாட்டிலிருந்து 2020-ல் 20,000 மெகாவாட்டும், 2032ல் 63,000 மெகாவாட்டும் தயாரிப்பதைக் தங்கள் திட்டமாக முன்வைக்கின்றனர். இவை அனைத்திற்கும் உதவி செய்ய வெளி நாட்டு அரசுகள் முன்வருகின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இருக்கிறார் பாரதப் பிரதமா.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, அணுஉலைகள் அமைப்பதில் உறுதியாக இருந்தது இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட விதத்தில் இருந்து தெரிகிறது. முந்தைய சுற்றுச்சூழல் அமைச்சரும் ஜெய்தாப்பூர் அணுமின்நிலையம் அமைப்பது பற்றி மறுசிந்தனைக்கு இடமில்லை என்று கூறினார்.
ஏற்கெனவே பன்நெடுங்காலமாக நடைபெற்று வரும் அணுஉலையை எதிர்த்த போராட்டங்களின் போது பல உயிர்ப்பலிகள் நடந்திருக்கின்றன. 1989ல் கன்னியாகுமரியில் கூடங்குள அணுஉலைகள் வேண்டாம் என்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இருவர் மரணமடைந்தது வரலாறு. 2011 ஏப்ரல் மாதம் ஜெய்தாப்பூரில், அணுஉலைகளை அமைக்க வேண்டாம் என்ற மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார்.
கூடங்குளத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இயங்கத் தயாராக உள்ள அணுஉலைகள், திட்டமிடப்பட்டுள்ள மற்ற அணுஉலைகளும் தங்கள் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும், சந்ததியினரையும் பாதிக்கும் அதனால் அணுஉலைகள் வேண்டவே வேண்டாம் என்பது கூடங்குளத்தை ஒட்டிய பகுதி மக்களின், உள்ளாட்சி மன்றங்களின் ஒருமித்த உணர்வாக இருக்கிறது. மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
புதுதில்லியில் அக்டோபர் 22, 2011 ம் தேதி நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய போது பாரதப் பிரதமர் "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நலத்திட்டங்களை வகுத்து பயனளிக்கும் விதத்தில் பணியாற்றிட ஒன்று கட்டாயமாகிறது …. அது குறுகியகாலத் தன்மை கொண்ட கவலைகள், நீண்ட கால வளர்ச்சிப் பணிகளை முடக்கிவிடாதவாறு, அரசைக் செயல்பட அனுமதிக்கும் விதத்தில், அரசியல் செயல்முறைகள் இருக்கவேண்டும். இதன் பொருள், பல விசயங்களில் எதிர்மறை அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் பாராளுமன்ற X சட்டமன்ற அரசியல் கட்சிகள் ஒரு கடினமான சமனை ஏற்படுத்திக் கொண்டு, நீண்ட கால தேசியத் திட்டங்களில் அவை ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்பதே" என்றார்.
குறிப்பாக தமிழ்நாடு தொடர்பாக, பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயம் அணுஉலை மூலம் மட்டுமே தன்னிறவை எட்ட முடியும் கூடங்குள அணுமின் உலைகளைக் குறித்த காலத்தில் இயக்க தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கூறி வருகிறார் பாரதப் பிரதமர்.
தேசிய அளவிலும், அணுஉலைக்கான மாற்று ஏதும் தெரியாததாலும், விசயம் அதி நவீன தொழில்நுட்பம் சார்ந்ததாக இருப்பதாலும் பெரும்பாலான தேர்தல் அரசியல் கட்சிகள் அணுஉலைப் பாதுகாப்பை மையமாக வைத்தே பேசிவருகின்றன. கூடங்குள அணுஉலைகள் குறித்து கூடங்குள அணுமின் நிலையப் பாதுகாப்பு அம்சங்களை மத்திய அரசு மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.
அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என்று மத்திய அரசு குறியாக உள்ள நிலையில் கட்டப்பட்டு விட்ட கூடங்குள உலைகளை இயக்குவதைத் தவிர வழியேதும் தெரியவில்லை என்று அணு உலைகளுக்கு ஆதரவாக சில ஊடகங்களும், எதிராகச் சில ஊடகங்களும் கருத்துக்களை வெளியிடுகின்றன.
நாட்டின் ஆற்றல் துறைச் சார்ந்த அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் விவாதப் பொருள் தங்களுக்குத் தொடர்பில்லாதது போல் அணுஉலை மூலமான மின்சாரத்திற்கு மாற்றுவழிவகைகள் ஏதும் உண்டா என்பது பற்றிப் பொதுவெளியில் விளக்காமல் ஆழ்ந்த மவுனம் சாதிக்கின்றனர். மாறாக நம் அணுவிஞ்ஞானிகள் ஆற்றல் விஞ்ஞானிகளாகக் காட்சி தர முயற்சிக்கின்றனர். தேசத்தை அணுசக்தியின் பாதையில் முடுக்க முனைந்துள்ளனர்.
கூடங்குள அணுஉலைகள் தொடர்பாக 13,147 கோடி ரூபாயைக் கட்டுமானச் செலவு செய்தபின் இயக்கவிருக்கின்ற நேரத்தில் மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே தடுத்து நிறுத்தியிருக்கலாமே! என்ற வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.
அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது அணுஉலையே அதற்குத் தீர்வு அணுஉலையை நிறுவத் தகுந்த இடத்தில் தானே வைத்தாக வேண்டும் என்ற வாதம். அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது.
வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலனையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!
அணுஉலைகளின் மூலம் தயாரிக்கப்படுகிற மின்சாரம் பற்றிய பிரச்சனையாகத் துவங்கினாலும், தோன்றினாலும், உண்மையில் இது ஆற்றல் பற்றிய பிரச்சனை தான். ஆற்றல் X எரிசக்திக்கான போட்டாபோட்டியில் உலக அரங்கில் வல்லரசுகள், பல்வேறு நாடுகளில் தங்கள் படைகளை இறக்கி, ஏதேதோ காரணங்களைச் சொல்லி, அங்கு அதிகாரத்தில் உள்ளோரை, மக்களை கொன்று குவித்து ஆற்றல் X எரிசக்திக்கான தங்களின் அடங்காப் பசியைத் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதும் வரலாறு. சில ஆண்டுகளுக்கு முன் ஈராக்கிலும், தற்போது லிபியாவிலும் நடந்தவைகளை நாம் நன்கறிவோம். பல லட்சம் கோடி டாலர்கள் புழங்குவது தான் இந்த ஆற்றல் துறை!
தற்போது தேசம் எனும் குதிரைக்கு சேனம் பூட்டப்பட்டு விட்டது. அணுஉலை பாதுகாப்பானதா? இல்லையா? என்ற ஒரே திசையில் தேசத்தை முடுக்கிவிடுகின்றவர்களாக உள்ளனர் அணுவிஞ்ஞானிகள்.
ஆக, பொது வெளியில் இன்று விவாதப் பொருள் அணுஉலை பாதுகாப்பானதா? இல்லையா? என்ற தர்க்கமாகச் சுருக்கப்பட்டுள்ளது.
அணுவிஞ்ஞானத்தளத்தை ஒட்டியதாக மட்டும், கூடங்குள அணுஉலைகள் தொடர்பாக மட்டும் பாதுகாப்பு உள்ளிட்ட எவற்றைப் பற்றி பேச வேண்டும் என அதிகார அணுவிஞ்ஞானிகளும், அரசும் பேசத் திட்டமட்டுள்ளார்களா அதைப் பற்றி மட்டுமான தொழில்வல்லுனத்தன்மை கொண்ட அரசு – போராட்டத்தரப்புக்கு இடையிலான விவாதங்கள் என்று சுருக்க நடந்துவரும் அரசின் முயற்சிகளில், மத்திய அரசின் பொறியில் மக்கள்திரள் போராட்டங்கள் சிக்குகின்றனவா என்ன?