Thursday, July 18, 2019

முத்தம்.! - யாதுமானவன்

 முத்தம்,
தரும் போதே
கிடைத்தும் விடுகிறது.!

முத்தமிட அனுமதி கேட்டு
காத்திருத்தல் எப்படி
காதலாகும்.!

முத்தக் கடனுக்கு
வட்டி அதிகம்
நீ தரும் முத்தமெல்லாம்
வட்டி கணக்கில் போய் விடுகிறது
அசலை எப்போது தருவாய்.!


தவறிழைக்கும் போதெல்லாம்
இதுவே கடைசி சரியா
என‌ முத்தமிட்டு மீண்டும் மீண்டும்
தவறு செய்ய தூண்டுகிறாள்.!


இதழ் குவித்தேன்
புரியவில்லை என்பது போல்
இதழ் சுழிக்கிறாள்
செய்முறை விளக்கம்
கேட்கிறாள் போல.!


உடை சரி செய்வது
போல் இடம் சுட்டி
பொருள் கூறுகிறாள்
இதையெல்லாம் ரசியென்று.


சென்னை வெய்யிலிலும்
ஈரமாகவே உள்ளது
அவள் இதழ்.!


மற்ற தெய்வங்களை
தரிசித்துவிட்டு மூலவருக்கு
வருவதைப் போல
இதழ் முத்தம்.!


கேட்டதை விட‌ சிறப்பாக
கிடைத்தாலும், கேட்டது
கிடைக்காதது ஏமாற்றமே.


 


முத்தமிட
கன்னத்தைக்
காட்டுகிறாய்.
நீ என்ன குழந்தையா.!

அடுத்து பொழியப்போகும்
முத்த மழைக்கு அறிகுறி தான்
இந்த கோப மின்னலோ.


வார்த்தைகளால் விவரிக்க
முடியாதவைகளில் ஒன்று
முத்தம்.

போதும் வாய மூடு
என்பதற்கு பதிலாகவும்
முத்தமிடப்படலாம்.!

இப்போதைக்கு போதுமா
என்றாள்.
இப் போதைக்கு போதும்
என்றேன்.!

முள்ளை முள்ளால்
எடுப்பதுபோல்
மௌனத்தை இதழால்
திறக்க வேண்டும்.!

என்னில் பாதி தர
நானொன்றும் சிவனில்லை
என்னையே தருகிறேன் யாதுமாய்.!

எல்லாவற்றிற்கும்
தயாராய் இருக்கும் போது,
எதுவும் நேராமல் போவது
சிறு ஏமாற்றமே.