அந்த ஒரு முத்தத்தை
அதே போல
மீண்டும் கொடுத்துக் கொள்ள
முடியாதென்று
தெரிந்த பிறகுதான்
நாம் இதனைப்
பிரிவென்று ஒப்புக்கொண்டோம்.
----
அந்நியவர்களாகவே இருந்திருந்தால்
அவ்வப்போதாவது பேசியிருப்போம்.
பேசுவதற்கு ஆயிரமிருந்தும்
பிடிவாதமாகப் பேசாமலிருக்கும்
இந்த அன்பிற்குள்
நாம் சென்றிருக்கக் கூடாது.
--
காதலாகிவிடும் கணங்களில் எல்லாம்
வேறேதோ பேசிப்பேசி
கவனமாகத் தவிர்த்துக்
கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
உன்னை நீயும்
என்னை நானும்
தெரிந்தே
ஏமாற்றிக் கொள்கிறோம்
எப்போதோ காதலாகிவிட்ட ஒன்றை
நாம் நமக்குத் தெரியாமல்
மறைக்க.
--
அழைத்து தொந்தரவு செய்துவிடுவேன்
என அஞ்சி
உன் தொடர்பு எண்ணினை அழித்துவிட்டேன்.
பின்வரும்
பெயரில்லா அழைப்புகள் எல்லாம்
நீயாக இருந்துவிடக் கூடாதா என்று
அலைக்கழியும் மனத்தை
ஆற்றுப்படுத்ததான் ஆகவில்லை
--
வேறு எங்காவது நீ நன்றாக இருப்பாய்.
வேறு எங்காவது நானும் நன்றாக இருப்பேன்.
ஆனாலும்
நம்மைப் போல் வராது.
சேர்ந்தே வாழ்ந்துவிடுவோம்.
--
பாதத்திற்கும் உன் உதட்டிற்கும்
அறுபத்தியிரண்டு முத்தத் தொலைவு.
--